வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கற்றலின் அவசியம்

                    கற்றலின்  அவசியம்
முன்னுரை:
பெண்களின்  முன்னேற்றம்

                       
                    கல்வியே நம்மவரின் உயிர்த்துடிப்பு. “கல்வி” என்ற உயிர் இவ்வுலகில் இல்லையென்றால், நாம் அனைவருமே, உயிர் இல்லா திடப்பொருளாகிவிடுவோம். கல்வியால் நம் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கல்வி என்ற கலைச் செல்வம், நம் அனைவரையும், வாழ்க்கை என்ற மேடையில் நடிக்க வைக்கும் ஆசான். இப்படிப்பட்ட கல்வி கற்றலின் அவசியத்தை இக்கட்டுரையில்  விரிவாகக் காண்போம்
.
கல்வி:
                        “கல்லுதல்” என்பதற்கு தோண்டுதல்”,  வெளிக்கொணர்தல்” என்பது பொருள். அறியாமை என்ற அகக்களையை வேரறுத்து, அறிவு என்ற ஒளிச்சுடரை அறுவடை செய்வதே கல்வியாகும். உள்ளத்தை அறிவால் நிரப்பிட, ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதன் மனிதனாக வாழ்ந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.
கற்றலின் சிறப்பு:
                        “கற்கை நன்றே கற்கை நன்றே
                         பிச்சை புகினும் கற்கை நன்றே”
-என்று கற்றலின் சிறப்புப்பற்றி அதிவீரராம பாண்டியர் உணர்த்தியுள்ளார். ஒருவன் கல்லாமல் இருப்பதை விட, பிறவாமல் இருப்பதே மேல்” என்கிறார் பிளாட்டோ. ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு, அந்நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால், கற்றவனுக்கோ, சென்ற இடமெல்லாம் சிறப்பு. “அறிவுடைய ஒருவனை அரசனும் மதிப்பான்” என்கிறது “வெற்றி வேற்கை”
                                    கல்வி” அழியாது. வெள்ளத்தால் போகாது; வெந்தணலிலும் வேகாது; கள்வராலும் கவரமுடியாது. எவ்வளவு கொடுத்தாலும் நிறையுமே தவிர, ஒருக்காலும் குறையாது. இத்தகைய கல்விச்செல்வத்தை ஒவ்வொரு மனிதனும் கண்கண்ட தெய்வமாகக் கருத வேண்டும்.
கல்வியின் பயன்:
                        கல்வி கற்றலின் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்களைப் பெறமுடியும். நம்முள் புதைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றி, பகுத்தறிவைத் தருவது கல்வியே. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது கல்வியே.
                        கற்றவரே கண்ணுடையவர், கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்களை உடையவர். கற்றவரே மனிதர், கல்லாதவர் விலங்குகளுக்கும் மரத்திற்கும் ஒப்பானவர்.
கல்வி கற்றலின் பெருமை:
“ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழியானால், கல்வி இல்லாத மனிதன், அதனினும் குறைவானவன் என்பதை புது மொழியாகக் கொள்ளலாம். “எண்ணும், எழுத்தும் கண்ணெனத்தகும்” என்பது ஆன்றோர் வாக்கு. கல்வி கற்றவரை, அவருடைய வாழ்க்கை முறையில் இருந்தே அறிந்து கொள்ளலாம். எண் சாண் உடம்பினை உடைய மனிதனுக்கு தலையே முதன்மையானது. அத்தலையிலும் கண்ணே முதன்மையானது. அதனால்தான் கல்வி கற்றவரை கண்ணுடையார் என பெருமக்கள் பலர் கூறுகின்றனர்.
கற்றலின் அவசியம்:
                        கல்வி அறிவு இல்லாத எந்தவொரு மனிதனும், இவ்வுலகை வாழ்வியல் யதார்த்தங்களைக்கூட எளிதில் அறியமுடியாது. இன்றைய கணினி உலகில் அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் முதல், கல்வி அறிவு கடுகளவும் இல்லையெனில், அவற்றையும் அறிய முடியாது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற வாக்கின்படி நாம் அனைவரும் கல்வியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
முடிவுரை:
                        மக்களனைவரும் கல்வி பெற்றால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும். நாட்டு மக்கள் அறியாமை அகன்று, எல்லாச் செல்வங்களும் உடையவராகவும் விளங்குவர். மக்களாட்சி மாண்பு பெரும். இல்லை என்ற சொல் இல்லாமல் போகும். எனவே, கல்வி என்ற விலைமதிப்பில்லா செல்வத்தை அனைவரும் பெற நாம் உறுதுனையாய் இருப்போம்.
                         

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

திண்டுக்கல்லின் பெருமைகள்

திண்டுக்கல்லின் பெருமைகள்

 திண்டுக்கல் என்றாலே
 மிகச் சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை,
 உலகப்புகழ்மிக்க பூட்டும்
 தோல்பதனிடும் தொழிற்சாலையும் தான்
 நம் நினைவுக்கு வருகிறது...

 திராட்சைக்கு திண்டுக்கல்
 எண்ணை புரோட்டாவுக்கும்
 மாம்பழத்துக்கும் நத்தம்
 மல்லிகைப் பூ மதுரைக்குப் பெருமையில்லை
 நம்ம நிலக்கோட்டைக்குதான் பேர் போனது
  மலைகளின் இளவரசி கொடைக்கானல்
 இதமான தென்றல் காற்று சாரல் மழை
 எல்லா நாழும் வெளிநாட்டவர் வருகை
 தமிழ் நாட்டின் இரண்டாவது வருமானம்
 நம் பழனி முருகன் கோவில் காணிக்கை
 மற்றும் தெய்வமனம் மருத்துவம் கொண்ட
 திருப்பிரசாதம் பஞ்சாமிர்தம்
 வருடத்திற்க்கு தைப்பூசம்
 பங்குனி உத்திரம் ஆகிய
 விழாக்காலங்களில் கோடிக்கனக்கான மக்கள்
 எல்லா மதத்தினரும் தரிசனம் செய்கின்றனர்

 வெத்தலைக்கு வத்தலக்குன்டு
 ஆடி மாதத்தில் கனக்கில் கொள்ளாத[விராலிப்பட்டி]
 அளவுக்கு கிடாவெட்டும்
 கோட்டைக் கருப்பனசாமி கோவில்

 தென்னிந்திய புகையிலை ஆராய்ச்சிமையம் வேடசந்தூர்
 முருகனின் எட்டாவது படைவீடான
 திருமலைக்கேனி
 சுவைமிகுந்த பாரம்பரியமிக்க பால்பன்
 24 மனி நேரமும் கிடைக்கும் நம்ம கோபால்பட்டி
 நயமான தரமிக்க சராயத்திற்கு
 நம்ம வக்கம்பட்டி ஆ வெள்ளோடு

 பக்தர்கள் அதிகம் வருகைதரும்
 தமிழ்நாட்டின் சிறப்புமிக்க பைரவர் கோவில் தாடிக்கொம்பு
 தக்காளி மார்க்கெட்டிற்கு அய்யலூர்
 தமிழகத்தின் மிகப் பெரிய காய்கனி மார்க்கெட்
 இந்தியாவின் எல்லா மாநிலத்திற்க்கும் காய்கனி அனுப்புகிறது-
ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையும் உள்ளது

 தென்தமிழகத்தின் கேட்
நம்ம திண்டிமாநகரம்
 காஷ்மீர் 2 கன்னியாகுமரி
 தேசிய நெடுஞ்சாலை இரயில் போக்கு வரத்து
 திண்டுக்கல் வழியாகச் செல்கிறது
 உலகத்தில் சுவைமிகுந்த பிரியாணி என்றாலே
நாவிற்கு எச்சில் ஊரும்
 நம்ம திண்டுக்கல் பிரியாணி

 தமிழகத்தில் எங்கும் காணாத
 பேருந்துநிலைய நுழைவாயில்
 எட்டு வழிகள் உள்ளது

 மா பலா வாழை என்ற
 முக்கணிக்குச் சொந்தம் சிறுமலை
 இதமான சிறுமலைச்சாரல்
மூலிகைசூழ்ந்த அடத்தியான வனக்காடுகள்
 அரியவன விலங்குகள்
 ஆஞ்சநேயர் தூக்கிச்சென்ற
 மூலிகைமலையின் சிறிய உதிரிதான்
 நம்ம சிறுமலை
ஆடி மாதம் மற்றும் மாசி மாதம்
 விழாக்காலங்களில் உலகப்புகழ்பெற்ற
 திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் திருவிழா
 தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில்

பல மாநிலங்களை இணைக்கும்
மேற்குத்தொடர்ச்சிமலை
 நம்ம மாவட்டத்தைச் சுற்றி
 மதுரை
தேனி
 சிவகங்கை
புதுக்கோட்டை
 கரூர்
 திருச்சி
 திருப்பூர்
 கோவை
 ஆகிய மாவட்டங்களும் கேரள மாநிலமும்
 எல்லையாக உள்ளது

 வானம் அதிர வீரக்கல்
 பழைமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள்
அதிகம் உள்ள மாவட்டம் நம்ம திண்டுக்கல்
 இந்தியாவில் இரண்டாவது பள்ளிவாசல்
 பேகம்பூர் உலகப்புகழ் புண்ணியமிக்கத்தலமான
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு
 செல்லும் முக்கிய போக்குவரத்து சாலை
திண்டுக்கல் தேனி சாலை
 இதையெல்லாம் விட
பாசத்திற்கும் வீரத்திற்கும்
 அடிக்கவும் அடியாட்டகளுக்கும்
 அடங்காதவனுக்கும் அலப்பரைக்கும்
 அஞ்சாதவனும் அறுவாமீசைக்கும்
அராஜகத்திற்கும் அடிபனியாதவனுக்கும்
 அன்புக்கும் அடிபனியிரவனும்
 எல்லா பாசக்கார நண்பனும்
 திண்டுக்கல்லில் தான் இருக்காங்க

அடி கொடுக்க அனுமந்தராயன் கோட்டை
 நெஞ்ச நிமித்தினா நிலக்கோட்டை
 ஆலச்சிதைக்க சித்தையன்கோட்டை
பகைக்கு பாளையங்கோட்டை
 வெடிகொடுக்க வேல்வார்கோட்டை
 வீரத்திற்கும் கம்பீரத்திற்கும் நம்ம மலைக்கோட்டை
எங்ககிட்ட பன்னாத சேட்ட…
 மொத்ததுல திண்டுக்கல் எங்க கோட்டை...

தேசப்பிதா காந்தியடிகள்

தேசப்பிதா காந்தியடிகள்
 புரட்சியை புதிதாய் படைத்தவர்
 பூவையும் புரட்சி செய்ய வைத்தவர்
 அஹிம்சை என்ற அன்பு ஆயுதத்தால்
 பூவும் புயல் வீசும் என்று காட்டியவர்...

 வாய்ச் சொல்லால் மனித மனதில்
 ஆழம் பொதிந்து ஆட்கொண்டவர்
 அந்நியனென்று நினையாமல்
 அனைவரையும் அன்பால் ஈர்த்தவர்..

 தமிழனைக் கண்டு  தனை வருத்தி
 அரை ஆடை உடுத்தி
 இவர் என்று ஆடை அனிவாரோ
அன்றே நானும் அனிவேன் என்று
 உள்ளத்தால் உறுதி கொண்டவர்..

 வெள்ளை முகங்களை வெளியேற்றி
 கருப்பு முகங்களுக்கு ஒளியேற்றியவர்..
 நம்மை இந்தியரென்று சொல்ல
 நாளும் உழைத்த உத்தமர்..

 தண்டியாத்திரை மேற்க்கொண்டு
 உப்புசத்தியாகிரகத்தில்
உலகையே மிரள வைத்த மகான் அவர்..

 இயேசுவையும் புத்தரையும் மதித்து
 இன்னுயிரையும் அன்பு செய்யென்று
 மாண்புமிக்க மதிநுட்பங்களை
கற்றுத்தந்தவர் நம் காந்தியடிகள்..

 அரும்பென முளைத்த விஷவித்தகர்களை
 வேரறுத்து வெளியில் தள்ளி
 வெட்கமுற காறி உமிழ்ந்து
 நாட்டைக் காப்பாற்றியவர் நம் காந்தி.

. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று
 உள்ளத்தால் இனி இல்லை என எண்ணி
பாசத்தையும் ஏக்கத்தையும்
 பதியவைத்து மாசற்ற மனங்களை வளர்த்தவர்..

 அறியாமையில் ஆழ்ந்துரங்கிய
 அன்பு மக்களை ஆரத்தழுவி
 அல்லல் இனி இல்லை என
அறியாமையைத் தூக்கியெறியச் செய்தவர் நம் காந்தி..

 அன்பான அறிவாற்றலால்
அவையம் அனைத்தையும் ஆளமுடியும் என்ற
 அன்புக்கட்டளையை 
அனைவரையும் ஆசையோடு பாடவைத்தவர்..

 அண்ணல் காந்தியடிகள் ஒரு சகாப்தம்
 உலகனைத்தும் இந்தியாவைத் தேடிவர
 நட்புக்காக அயல்நாட்டவரோடு
 கைகோர்த்து வெற்றிக் களிப்பில் இணைய
 மனதில் இடம் கொடுத்தவர் காந்தி..

  வையகமே வானளவும் உயர்ந்து
 வாழ்த்துக் கீதம் காந்தியடிகளுக்காய்
 வசந்தமனைத்தும் இந்தியருக்காய் என
 வாகை சூடிய மகான் நம் காந்தி

 வெள்ளையனை வெளியேற்றி 
-நாட்டில் உள்ளவனைக் களிப்பேற்றி
 கவிதையும் காவியமும் களைகட்ட
 கானகத்துக் குயிலொன்று இசை பாட
 தேசியக் கீதமிசைத்து நெஞ்சங்களை
புரட்சித் தீ பற்றியெரியச் செய்தவர் நம் காந்தி..

  உலகத்தையே வியக்கவைத்த வித்தகர்
 அவரின் சொல்லாலும் பேச்சாலும்
மக்களின் மனங்களை மனங்கொத்திப் பறவையென
பேச்சு மந்திரத்தால் வசியம் செய்தவர்.
 அவருக்கு ஈடு இணை இல்லை
இனி இருக்கப் போவதும் இல்லை
 நம் தேசப்பிதாவைப் போல
 இனி எத்தனை காந்திகள் நம் நாட்டில் பிறக்கப் போகிறார்கள்…
 இல்லை என்றே சொல்லலாம் ..

ஆகவே நம் தேசப் பிதாவை வணங்குவோம்.அவரின் ஆற்றல் மிகு செயல்களுக்காய் அவரைப் பாராட்டுவோம். அவர் விட்டுச் சென்ற அகிம்சை என்ற அன்புப் பணியை நாமும் தொடர்ந்து ஆற்று வோம்..
 வாழ்க நம் பாரதம்
 வளர்க நம் இந்தியா
 ஜெய்ஹிந்த்…. 

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

புத்தகப் புழு

புத்தகப் புழு

நல்ல புத்தகம் ஒரு

நல்ல நண்பன்

எனை யாசிப்போரை

நான் ஆசிக்கின்றேன்..

 

குளத்தைக்  குளப்பினாலும்

கொண்ட அறிவுமட்டும்

குறைவுபடாது..

 

குறிக்கோள் கோணலானாலும்

குறிக்கோளை அடைய வேண்டுமென்ற

குணம் மட்டும் போதுமே..

 

வார்த்தைகளை வரிகளாக வடித்து

கருத்துக்களை மணங்களில் இரைத்து

கல்வி என்ற திறவுகோலில் திறந்து

அறிவை வளர்க்க

ஆழமான சிந்த்னைகளோடு

புத்தகங்களாக வருகிறேன்

தினமும் உங்கள் வாசல் தேடி..

 

என்னை எடுத்து சுமப்பவருக்கு

அறிவுக்கணி எளிதாகக் கிடைக்கும்..

 

பாகுபாடில்லாத பகுத்தறிவுக்கடல் நான்

எனைப்படிக்க குலமும் கோத்திரமும்

தேவையில்லை..

 

எனைப்  படிக்க  படிக்க

பாமரனும்  பண்பாளனாகத்தான்

ஆக  முடியுமே  தவிர

பகட்டும், பண்பற்றவராக முடியாது..

 

நானும்  உனைப்போல  ஒரு

புத்தகமாக  மாற  ஆசை -  ஏனெனில்

என்னை  மார்மீதும்  தோள்மீதும்  சுமந்து

ஆரத்தழுவி  அன்பு  செய்ய

எத்தனை  நல்ல  உள்ளங்கள்..

 

கதையையும்,  கற்பனைகளையும்

கருத்துக்களையும்  உணர்ச்சி  பொங்க

வரிகளாக  வாசம்  செய்வது

நல்ல  புத்தகமே..

 

வரிந்த  வசகங்களை

சுமந்து  நிற்கும்  சுவற்றிற்குத்தான்  தெரியும்

வரியின்  வலிமை  எத்துனை  வலியது  என்று..

 


 

கல்விப்பெருந்தகை கர்மவீரர் காமராசருக்கு

கல்விப்பெருந்தகை கர்மவீரர் காமராசருக்கு

கல்வி என்ற அறிய உயிரை
கண்ணாகக் கொடுத்த – எம்
கல்வி ஆசான்
கல்விப்பெருந்தகை
கர்மவீரர் காமராசரே…

விருதுநகர் மண்ணில்
விருதுபட்டி முத்தாய்ப் பெற்ற
தலை மகனே
நீவீர் வாழ்க…

சாலைகள் தோறும்
கல்விச் சாலைகள் பெருகிட
சாலச்சிறந்த கல்வியை
சாமானியனும் பெற்றிட
சதா உழைத்த எங்கள்
சிம்ம சொப்பனமே
நீவீர் வாழ்க…

கல்வியின் மேன்மையை
கிராமங்களின் வாசல் வரை
வந்து விளையாட செய்தவரே…

கல்வி இல்லா இடம்
இனி இல்லை என்று
பார்போற்றிட செய்தவரே…

படித்தும்.. இன்றும்
பாமரனாய் வாழும்
மனிதர் மத்தியில்
படிக்காத மேதையாய் – அன்றே
அரசியலில் ஆய்வு செய்தவரே…

அரசியலில் ஆய்ந்தவரும்
அன்னார் உம்மையே
அனுகிடச் செய்தவரே…

மக்களின் மாண்பையும்
மேன்மையையும் மதித்து
மங்கா புகளோடு
மனிதர் மத்தியில்
மறையா தழும்பாய், சுவடாய்
வாழ்பவரே…

உம் வாழ்க்கை கற்றுத்தந்த
பாடங்கள் பல…
எளிமைக்கு விலாசம்
உன் வீடே..
ஏழையும் பாளையும்
உங்களுக்கு அழையா
விருந்தாளிகளே…

சர்க்காரின் சலுகையை
சாமானியனுக்காகவே என்று
சலுகைகளைத் தூக்கி எறிந்தவரே…

கிடைத்தவரைப் போதும்
என்று என்னும் மனிதர் மத்தியில்
கிடைத்ததையெல்லாம்
கிடைக்காதவனுக்கு
பங்கிட்டு அழகு பார்த்தவரே…

சிபாரிசுக்கு வந்த உறவினனையும்
சிந்திக்க வைத்தவரே..
சிரமங்கள் இல்லாமல்
சிகரங்களை எட்ட இயலாது என்றும்
சிக்கன வாழ்க்கை
சிங்காரத் தோட்டம்
சிதைந்த மனங்களும்
சிந்தித்தால் போதும்
வேதனைகளையும் சாதனைகளாக்கி
சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும்..
சிரத்தையோடு போராடினால் போதும்
சிகரம் நம் கைகளில் தவழும் என்ற
சிந்தனையைத் தந்தவரே…

வாழ்க்கை என்ற பாடத்தை
வாழ்ந்து காட்டிவிட்டுச்
சென்றுள்ளீர்..

வாழ்க்கையை வரமாகப்
பெருவது வழக்கம் - ஆனால்
வரத்தையே வாழ்வாகப்
பெற்று எங்களையும் இப்படி
வாழ அழைப்பு விடுத்தவவரே…


விதையிட்ட இடத்திலே
விருச்சமாவோம் என்றும்
எண்ணித்துனிந்த காரியம்
எளிதில் வெற்றி பெறும் என்ற
விந்தை மந்திரத்தை
விட்டுச் சென்றவரே…

ஓயா உழைப்பும்
உறிதியான நம்பிக்கையும்
ஊக்கப்படுத்தும் வார்த்தையும்
வாழ்க்கையை இலகுவாக்கும்…

அன்பான அறிவுரையும்
ஆறுதலான வார்த்தையும்
இன்பம் நிறைந்தை இதயமும்
ஈகை கொண்ட மனமும்
உறுதியான உள்ளமும்
ஊக்கமுள்ள முயற்சியும்
எண்ணத்தில் தெளிவும்
ஏக்கத்தில் ஆக்கமும்
ஒருங்கினைந்த சிந்தனையும்
ஓயாத உழைப்பும்
தனிமனித வெற்றிக்கு
வழிகாட்டும் படிக்கட்டுக்கள்

இது கர்மவீரர் காமராசர் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியுள்ள வாழ்வியல் கணிகளாகும்..

வியாழன், 10 செப்டம்பர், 2015

பூ

பூ
என்மேல் விழும் பார்வைகள் எல்லாம்
எளிதில் மறைபவையல்ல
ஏனெனில்
என் பெயர் பூ…

எனக்கு குணமுண்டு, மணமுண்டு
ஆனால் மனமில்லை
இருந்திருந்தால் உங்களை முழுவதும்
அறிந்திருப்பேன்…

எனக்கு எவ்வளவு
கிராக்கி என்று
எல்லோரிடமும் கேட்டுப்பாருங்கள்…

மங்கையரின் மனங்களில்
மட்டும் மனிக்கொருமுறை
வாசம் செய்வேன்…
ஏனெனில்
என் வாசனை அப்படி…
எனையறிந்த அநேகரில்
சிறந்தோர் மங்கையரே…
பேதை, பெதும்பை
மங்கை, மடந்தை
அரிவை, தெரிவை,
பேரிளம் பெண்-என
ஏழு பருவ மங்கையரும்
எனக்காய் ஏங்கித்தவிக்கும்
ஏற்றம் பெற்ற பூ நானே…

எளிதில் என்னை
மறந்துவிட முடியாது…
எப்போதும் என்னை
துறந்துவிடவும் முடியாது…

மங்கள அமங்கள
நிகழ்வுகள் யாவும் – என்
வரவேற்பை எண்ணியே
தவம் கிடக்கும்…

உன்னை அழகுசெய்தவன்
உன்னைப் படைத்தவன் – ஆனால்
உன்னைப் படைத்தவனையே
அழகு செய்வது பூ நானே…

என்மேல் விழும்
பனித்துளியும்
வெட்கத்தின் முன்
அங்கும் இங்கும்
பிதுங்கிய விழிபோல
வெளியில் அலையும்…

பூவும் பூவும்
மோதிக்கொண்டால்
தித்திக்கும் தேன் துளியும்
தானாய் வீனாய்ப்போகும்…

என் இதழ்வருடி
ஸ்பரிசம் தூண்ட
என் இதயத்தைக்
களவு செய்ய
சூத்திரனும் சாத்திரனும்
சத்திய வேள்வியிலே
சங்கமிக்க எனை
அள்ளித்தூவுவானே…

கடவுளிடம் வரமொன்று
பெற முடியுமானால் – நான்
வாடாமல் இருக்க
வரம் வேண்டுவேன்…