வியாழன், 29 ஜூலை, 2021

தண்ணீர் தேசம்


தண்ணீர் தேசம்
                                                                                                                                  தாகத்தின் பசி தண்ணீர்.நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வாக்கு. நமக்கு தண்ணீர் தேவை. ஆனால் நீரை சேமிக்க நாம் முன் வருவது இல்லை. நீர் நமக்கு முக்கிய தேவையாக உள்ளது.முதலில் நாம் இயற்கையைப் பேன வேண்டும். அதன்மூலம் தான் நமக்கு என்னற்ற பலன்கள் கிடைக்கும்.                                                                                                                       மனித வாழ்க்கையில் எத்தனையோ போரட்டம். நாம் எதைப்பெற வேண்டுமானாலும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது.அதனால்தான், மனித வாழ்க்கையே போராட்டம் என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஏராளம். அதில் நாம் எதை கடைபிடிகிறோம் என்பதைப்பொருத்து தான் நம் வாழ்வு இனிமையானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.                                                                                                                                         நீரைச்சேமிக்க நம்மால் முடிந்த செயல்களை  சமூக நல குழுக்கலோடு இனைந்து குளம்,குட்டை, மற்றும் ஏரிகளை தூர்வாரி மக்களின் தண்னீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முன் வர வேண்டும்.நீரில்லா உலகை மாற்றி, நீராதாரம் உள்ள உலகு படைக்க உறுதி ஏற்போம். புதிய தண்ணீர் தேசம் படைப்போம்.
இதயத்தின் ஏக்கம்                                                                                                                                  



  நித்திரையில் தொலைத்த - என்                                                                                                  நிஜங்களைத் தேடி                                                                                                                            நாளெல்லாம் அழுகிறேன் - என்                                                                                                  நெஞ்சம் வாடி...                                                                                                                                  உள்ளக் குளத்தில் கல்லெறிந்து                                                                                                  உண்மைக் கருத்தைக் களவாடி                                                                                                  உலகக் கழிப்பில் மிதக்க                                                                                                                உவகையுடன் கரம் கோர்ப்பேனடி...                                                                                          தொலைந்து போன இதயம் தேடி                                                                                                தெருவெல்லாம் கடந்து போனேன் - உன்                                                                                தெருமுற்றம் வந்ததும்  வந்த - என்                                                                                          திசைமாறி போனதடி...                                                                                                                    கடந்து வந்த பாதைதோறும் - என்                                                                                              கண்ணீர் வடுக்கள்                                                                                                                              கடைசி நிமிடக் குமுறல்வரை - என்                                                                                          காய்ந்து போன குரல்களே...                                                                                                          இதயத்தைக் கீறித்தான் அன்பு                                                                                                      வளர்க்க வேண்டுமா?                                                                                                                      இதயத்தைக் கொடுத்தாலே அன்பு                                                                                             வளரும் தன்னாலே.. 

செவ்வாய், 20 ஜூலை, 2021

கல்வி கற்றலின் அவசியம்


கல்வி கற்றலின் அவசியம்

முன்னுரை :



இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
132
கல்வியே நம்மவரின் உயிர்த்துடிப்பு. “கல்வி” என்ற உயிர் இவ்வுலகில் இல்லையென்றால், நாம் அனைவருமே, உயிர் இல்லா திடப்பொருளாகிவிடுவோம். கல்வியால் நம் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கல்வி என்ற கலைச் செல்வம், நம் அனைவரையும், வாழ்க்கை என்ற மேடையில் நடிக்க வைக்கும் ஆசான். இப்படிப்பட்ட கல்வி கற்றலின் அவசியத்தை இக்கட்டுரையில்  விரிவாகக் காண்போம்.

கல்வி:
                   “கல்லுதல்” என்பதற்குத் தோண்டுதல்”,  வெளிக்கொணர்தல்” என்பது பொருள். அறியாமை என்ற அகக்களையை வேரறுத்து, அறிவு என்ற ஒளிச்சுடரை அறுவடை செய்வதே கல்வியாகும். உள்ளத்தை அறிவால் நிரப்பிட, ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதன் மனிதனாக வாழ்ந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.ஒரு பண்பான மனிதனின் தேடல் கல்வியும், கல்வி கற்றலுமேயாகும்.கல்வி ஒரு மனிதனைச் செதுக்கி அழகுறச்செய்யும்.மனித மாண்பினில் வளரச்செய்யும். மனிதத்தைத் தளைக்கச்செய்யும். கல்வி கற்கின்ற அளவில் அறிவு பெருகும் என்கிறது குறள். நூல்களாலும் நுட்பமான அறிவினாலும் பொருள்களை அறிய அறிய அதற்குமுன் இருந்த அறியாமை விளங்கித்தோன்றும் எனவும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.விளக்கை ஏற்றுவதன் நோக்கம் பொருள்களை அறிவதே அன்றி இருட்டை போக்குவது அன்று. எனவேதான் கல்வியை விளக்கு என்கிறோம்.கல்வி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்துள்ளன. கல்வி உடையவனே கண் உடையவன்.கல்வி இல்லாதவன் களர்நிலம் போன்றவன். கல்வி கரையற்றது. எனவே, வாழ்நாள் முழுவதும் ஒருவன் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். செல்வர் முன் ஏழையர் பணிந்து நிற்பது போல் ஆசிரியர் முன் பணிவாய் நின்று கற்கவேண்டும். தன் மகனைச் சான்றோன் எனப் பாரட்டக் கேட்கும் தாய் அவனை ஈன்ற பொழுதைக்காட்டிலும் பெரிதும் மகிழ்வாள்.மனமென்ற வயலில் கல்வி என்ற விதயைத்தெளித்து, நற்பண்புகள் என்ற பூக்களை அறுவடை செய்ய வைப்பதே கல்வி கற்றலின் நோக்கமாகும்.

கற்றலின் சிறப்பு:
                   “கற்கை நன்றே கற்கை நன்றே
                    பிச்சை புகினும் கற்கை நன்றே”
-என்று கற்றலின் சிறப்புப்பற்றி அதிவீரராம பாண்டியர் உணர்த்தியுள்ளார். ஒருவன் கல்லாமல் இருப்பதை விட, பிறவாமல் இருப்பதே மேல்” என்கிறார் பிளாட்டோ. ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு, அந்நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால், கற்றவனுக்கோ, சென்ற இடமெல்லாம் சிறப்பு. “அறிவுடைய ஒருவனை அரசனும் மதிப்பான்” என்கிறது “வெற்றி வேற்கை”
                             கல்வி” அழியாது. வெள்ளத்தால் போகாது; வெந்தணலிலும் வேகாது; கள்வராலும் கவரமுடியாது. எவ்வளவு கொடுத்தாலும் நிறையுமே தவிர, ஒருக்காலும் குறையாது. இத்தகைய கல்விச்செல்வத்தை ஒவ்வொரு மனிதனும் கண்கண்ட தெய்வமாகக் கருத வேண்டும்.

கல்வியின் பயன்:
                   கல்வி கற்றலின் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்களைப் பெறமுடியும். நம்முள் புதைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றி, பகுத்தறிவைத் தருவது கல்வியே. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது கல்வியே.கற்றவரே கண்ணுடையவர், கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்களை உடையவர். கற்றவரே மனிதர், கல்லாதவர் விலங்குகளுக்கும் மரத்திற்கும் ஒப்பானவர்.

கல்வி கற்றலின் பெருமை:
“ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழியானால், கல்வி இல்லாத மனிதன், அதனினும் குறைவானவன் என்பதை புது மொழியாகக் கொள்ளலாம். “எண்ணும், எழுத்தும் கண்ணெனத்தகும்” என்பது ஆன்றோர் வாக்கு. கல்வி கற்றவரை, அவருடைய வாழ்க்கை முறையில் இருந்தே அறிந்து கொள்ளலாம். எண் சாண் உடம்பினை உடைய மனிதனுக்கு தலையே முதன்மையானது. அத்தலையிலும் கண்ணே முதன்மையானது. அதனால்தான் கல்வி கற்றவரை கண்ணுடையார் என பெருமக்கள் பலர் கூறுகின்றனர்.

கற்றலின் அவசியம்:
                   கல்வி அறிவு இல்லாத எந்தவொரு மனிதனும், இவ்வுலகின் வாழ்வியல் எதார்த்தங்களைக்கூட எளிதில் அறியமுடியாது. இன்றைய கணினி உலகில் அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் முதல், கல்வி அறிவு கடுகளவும் இல்லையெனில், அவற்றையும் அறிய முடியாது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற வாக்கின்படி நாம் அனைவரும் கல்வியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.மனித மூலதனத்தை வைத்து எப்படி ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கணக்கிடுகிறோமோ அதைவிட மேலானது கல்வி.ஒரு நாட்டில் கல்வியின் ஆற்றல் இல்லையென்றால் அந்தநாடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சறுக்கல்களே மிச்சமாகும்.ஒருவனுக்கு கல்விப்பசி முழுமையடைந்தால் தான் அவன் ஒரு முழுமனிதனாகிறான்.கல்வி ஒருவனுக்கு வாழக்கற்றுக்கொடுக்கும்.கல்வியை கற்கும்பொழுதே பல திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். “கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்” என்ற கூற்றிற்கேற்றவாறு அனைத்துவித நூல்களையும் கற்றுத்தெளிவு பெற வேண்டும். கல்வியே ஒருவனுக்கு உலகாளும் சக்தியைத் தர வல்லது என்ற கருத்தை புறநானூற்றுப் பாடல் பின்வருமாறு விளக்குகிறது.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாதுகற்றல் நன்றே;
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்,
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்.
ஒருகுடிப் பிறந்த  பல்லோருள்ளும்
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’.
என்று மிகச்சிறப்பாக கல்வியின் அவசியத்தை கற்றலின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். கல்வி கற்கும் அரிய வாய்ப்பைப் பெற்ற அனைவரும் கல்வியின் சிறப்பையும் மாண்பையும் உண்ர்ந்து நன்கு படிக்க வேண்டும். கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதிப் படிக்க வேண்டும்.

முடிவுரை:
                   மக்களனைவரும் கல்வி பெற்றால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும். நாட்டு மக்கள் அறியாமை அகன்று, எல்லாச் செல்வங்களும் உடையவராக விளங்குவர். மக்களாட்சி மாண்பு பெறும். இல்லை என்ற சொல் இல்லாமல் போகும். எனவே, கல்வி என்ற விலைமதிப்பில்லா செல்வத்தை அனைவரும் பெற நாம் உறுதுணையாய் இருப்போம்.