புதன், 19 அக்டோபர், 2022

 

தீபாவளித் திருநாள்

 

            தீபாவளி திருநாள் என்பது இருளை அகற்றி ஒளிக்கு வழி நல்குவதே ஆகும். தீயசக்திகளைக் களைந்து நல்லவைகளை மனங்களில் சுமக்கும் நன்னாளே இந்தத் தீபாவளித் திருநாள். ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளித் திருநாளை அனைவரும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். உற்றார், உறவினர்களோடு இனிப்புகளைப் பகிர்ந்து, புத்தாடை உடுத்தி அன்பைப்பிறரோடுப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், உண்மையிலேயே இந்தத்  தீபாவளித் திருநாள் உணர்த்தும்  அர்த்தம் என்ன? இத்திருநாள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன?

            வாழ்க்கையில் அடக்குமுறைகளால் கட்டுண்டுள்ளச் சமுதாயத்தை விடுதலை செய்து, சமுதாயத்தில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை மற்றவர் புரியும் வகையில் செயல்படுவத்துவதே இத்திருநாளின் முக்கிய நோக்கமாகும். அறியாமை என்னும் அகஇருளை அகற்றி, நம்பிக்கை ஒளி ஏற்றுவதே இத்தீபாவளித்திருநாள் நமக்கு உணர்த்தும் செய்தியாகும். புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பறிமாரி, வீட்டில் தீபங்களை ஏற்றினால் மட்டும் தீபாவளி திருநாள் முழுமையடைந்து விடுவதில்லை. தன்னிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து, அவர்களது மகிழ்வில் இன்பம் காண்பதே உண்மையானத் தீபாவளித் திருநாளாக இருக்க முடியும்.

            நம்பிக்கை இழந்து வாழ்வின் இறுதி எல்லைக்குச் சென்றவர்களை மீட்டு, சமுதாய முற்போக்குச் சிந்தனைகளை அவர்களின் மனங்களில் தவளவிட்டு, மகிழ்ச்சி தீபங்களை ஏற்றி, வாழ்வில் புது வாசல்களைத் திறந்துவிடுவது தான் இத்தீபஒளித் திருநாள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றி ஐயன் திருவள்ளுவர், வாழ்வில் பகிர்தலை மிக அழகாக எடுத்துக்கூறுவார். வாழ்க்கையில் எப்போதாவது வெற்றிடம் தோன்றும்போது மனமகிழ்வைத் தொழைத்து, நிம்மதியின்றி அழையும் அநேக மக்களை நாம் வாழும் இந்த சமூகத்தில் பார்க்க முடிகிறது. அன்பைப் பகிரும்போது தான் மகிழ்ச்சி பிறக்கிறது.            மகிழ்வைப் பகிறும்போது மனம் நிறைவடைகிறது. இத்தீபஒளித்திருநாளில் நம் மனங்களில் உள்ள அழுக்குகளை அகற்றிவிட்டு, நல்ல நினைவுகளைச் சுமக்கும் மனம் படைப்போம். மனிதரை மனிதராக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டுவோம். அகக்களையை  அகற்றி நம்பிக்கையூட்டும் புது சமுதாயம் படைப்போம். அனைவர் வாழ்விலும் இன்பம் மலர்ந்து மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கட்டும். இனிய  தீபாவளி வாழ்த்துக்கள் .

 

                                                        தீபாவளித் திருநாள் 

மகிழ்வைப் பொழியும் ஒளியே – மனம்

மகிழும் முழு நிலவே

மங்கிய மனங்களைத் தட்டி – தினம்

மாந்தர் மகிழ்ந்திட மலர்ந்தாயே..

 

அக இருளை அகற்றி – மனம்

புதுப்பிறப்பெய்திடவே

ஆழ்ந்துறங்கிய மனிதரையெல்லாம் – தினம்

தட்டியெழுப்பிடப் பிறந்தாயே..

 

சிந்தனைத் துளிர் மழுங்கிய  - மனம்

வாடித்துயர் கொள்ளுமே

சாதனைத் தீப்பற்றியெரிய – தினம்

நாடித்துயில் கொள்ளுமே..

 

சமூக மாற்றம் தேடியே – மனம்

நாடித்தேடி ஓடுமே

அடிமைச் சமூகம் ஒழித்திட – தினம்

புதுச் சிந்தனைத் துளிர்த்திடுமே..

 

புத்தாடைப் புது இனிப்புகளை – மனம்

மகிழ்ந்து தந்திடவே

நாளும் புதுப்படைப்பு பெற்றிட – தினம்

மனம் இசைவு கொள்ளுமே..

 

மனிதம் சகமனிதர் புரிந்து – மனம்

ஏங்கித் தவித்திடவே

தீபங்கள் பல ஏற்றி – தினம்

மகிழ்வில் நாளும் திழைத்திடவே..