புதன், 4 ஆகஸ்ட், 2021

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கை                                                                                                                                   ஒருவர் தன் மீதும் தன் ஆற்றல் மீதும் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தோல்வியைக்கண்டு அஞ்சுவார்கள்.தன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்து மனம் தளர்ந்துவிடுவார்கள்.                                                                                                         தன்னம்பிக்கை என்பது ஒருவர் தனக்குள் கொள்கின்ற சுய தயாரிப்பே ஆகும். அவர் தன்னை அவ்வாறு தயாரித்துக்கொள்ளும் போது, தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்கிறார்.அப்போது தன்னுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி, தான் அடைய விரும்பும் இடத்தையும் சென்று அடைந்துவிடுகிறார். தன்னம்பிக்கை ஒருவரை நேர்வழியில் சிந்திக்க வைக்கிறது.                                                                                                                                          தன்னைப் பற்றிய சுய உணர்வே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மனோதத்துவ அறிஞர்கள். நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது மகிழ்ச்சியும் சாதனையும் அமைகின்றன என்கிறார்கள்.                                                 வளமான மனமும் தன்னைப் பற்றிய மேன்மையான சுய உணர்வும் கொண்டவர்கள் தன்னை மதிப்பதோடு தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் மதிக்கிறார்கள். ஒருவருடைய சுய உணர்வே அவருக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. சுய உணர்வு உடையவர்கள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்வதோடு தங்களுடைய பலவீனத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், தங்களுக்குக் கிடைக்கும் உண்மையான பெயரையும் புகழையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக